கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு
திருவள்ளுவர் சிலை என்பது
திருக்குறள் எழுதிய
திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு கன்னியாகுமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990 ,
செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000 ,
சனவரி 1 இல் திறக்கப்பட்டது.
சிலை அமைப்பு
திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.
சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது . கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
சிலை குறிப்புகள்
1. மொத்த சிலையின் உயரம் - 133 அடி
2. சிலையின் உயரம் - 95 அடி
3. பீடத்தின் உயரம் - 38 அடி
4. சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
5. சிலையின் மொத்த எடை - 7,000 டன்
6. சிலையின் எடை - 2,500 டன்
7. பீடத்தின் எடை - 1,500 டன்
8. பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்
சிலை அளவுகள்
1. முக உயரம் - 10 அடி
2. கொண்டை - 3 அடி
3. முகத்தின் நீளம் - 3 அடி
4. தோள்பட்டை அகலம் -30 அடி
5. கைத்தலம் - 10 அடி
6. உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
7. இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
8. கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி
கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை: கருணாநிதி திறந்து வைத்தார்
இருபதாம் நூற்றாண்டு முடிந்து 21 ம் நூற்றாண்டு பிறந்த வேளையில், குமரிமுனையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
குமரிமுனையில் விவேகானந்தர் மண்டபத்தை அடுத்து, கடலில் உள்ள பாறையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
31.12.1999 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. குறளோவியம் மற்றும் நூல் கண்காட்சிகளை சட்டப்பேரவைத் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் திறந்து வைத்தார்.
அடுத்து, குழந்தைகள் திருக்குறள் ஒப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டரை வயது சிறுவன் ஒருவன் அகர முதல... என்று தொடங்கி, திருக்குறளை ஒப்பித்தது அரங்கத்தை கரவொலியால் கலகலக்கச் செய்தது.
திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்த 22 மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அனுப்பப்படும்.
இனியும் இப்படி சாதனை படைக்கும் மாணவ மாணவிகளுக்கு அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீடு தேடிப்போகும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
பின்னர் ஆய்வரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஜி.கே.மூப்பனார், வைகோ மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தாஜ்மஹாலைப்போல தஞ்சைக் கோவிலைப்போல இந்தத் திருவள்ளுவர் சிலையும், இதை அமைத்த கருணாநிதியும் நீடித்து நிற்பார்கள் என்று சிவாஜிகணேசன் கூறினார்.
புத்தாயிரம் ஆண்டின் தொடக்க நாள் 1.1.2000 காலை 7.30 மணிக்கு 1,330 இசைவாணர்கள் நாயன இசை முழங்க, இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கின.
அன்றிரவு 7.30 மணிக்கு திருவள்ளுவர் சிலையை முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
அவர் ரிமோட்டில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும், 38 அடி உயர பீடத்தில் மின் விளக்குகள் பிரகாசித்தன.
95 அடி உயர சிலையின் கீழ்ப்பகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீல வண்ண ஒளி படர்ந்தது.
பிறகு மற்றொரு பொத்தானை அழுத்தி, சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்.
சிலையை வடித்த கணபதி ஸ்தபதிக்கும், அவருடைய குழுவினருக்கும் கருணாநிதி பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கினார்.
கருணாநிதி பேசுகையில், திருவள்ளுவரை இனி கவிஞன் என்றோ, புலவன் என்றோ அழைக்காதீர்கள்.
தெய்வாம்சம் பொருந்திய அவரை அய்யன் என்றே அழையுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
விழாவில் பல்வேறு கட்சித்தலைவர்கள், புலவர்கள், கவிஞர்களுடன், வெளிநாடுகளில் இருந்து பல தமிழறிஞர்கள் வந்து கலந்து கொண்டனர்.
இந்தச் சிலை பற்றிய வரலாறு வருமாறு:-
தமிழ்நாடு அரசு சார்பில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று 1975 டிசம்பர் மாதம் முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் சில நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டதால் அவரால் அத்திட்டத்தைத் தொடங்கமுடியவில்லை.
பின்னர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற எம்.ஜி.ஆர். கன்னியாகுமரியில் 40 அடி பீடத்தின் மீது 30 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
சிலை அமைக்கும் பணியை எம்.ஜி.ஆர். முன்னிலையில் மொரார்ஜி தேசாய் தொடங்கி வைத்தார்.
1981 ல் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், 45 அடி பீடத்தில் 75 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
1989 ல் மீண்டும் முதல்_அமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, கூடிய விரைவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்திற்காக 1990-91_ம் ஆண்டு பட்ஜெட்டிலும் பணம் ஒதுக்கினார்.
1990 செப்டம்பர் 6ந்தேதி திருவள்ளுவர் சிலை எழுப்பும் பணியை கருணாநிதி தானே உளியைக்கொண்டு செதுக்கி தொடங்கி வைத்தார்.
சிலை அமைக்கும் பணி, வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கிய கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் தலைமையில் 500 சிற்பிகள் கன்னியாகுமரி, அம்பாசமுத்திரம், சென்னையை அடுத்த சோழிங்க நல்லூர் ஆகிய 3 இடங்களில் சிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் சிலையை அமைப்பதால், கன்னியாகுமரியில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு (லைட் ஹவுஸ்) இடையூறு ஏற்படும் என்று கூறி, திருவள்ளுவர் சிலை அமைக்க 1994 ல் மத்திய அரசு தடை விதித்தது.
1996 ல் கருணாநிதி மீண்டும் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றபின், திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணிக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
சிலை அமைக்கும் வேலை இரவு பகலாக நடந்தது.
சிலை அமைக்கும் பணி விஜயதசமி நாளில் (19.11.1999) முடிவடைந்தது.
38 அடி பீடத்தில் 95 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, பீடத்தையும் சேர்த்து சிலையின் மொத்த உயரம் 133 அடி.
மொத்த எடை 7 ஆயிரம் டன்.
செதுக்கப்பட்ட 3,681 கற்களைக்கொண்டு, சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான மொத்த செலவு ரூ.10 கோடி.
இதில் 133 குறட்பாக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.