THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

13 Dec 2015

"வனத்துக்குள் திருப்பூர்' திட்ட நிறைவு விழா இன்று! பங்கேற்க பசுமை ஆர்வலர்களுக்கு அழைப்பு

வனத்துக்குள் திருப்பூர்' திட்ட நிறைவு விழா, திருப்பூரில் இன்று நடைபெறுகிறது; நம் மாவட்டத்தை, மரங்களால் பசுமையாக்கும் லட்சிய திட்டத்தின் நிகழ்வில் பங்கேற்க, பசுமை விரும்பிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தூய காற்று, பருவம் தவறாத மழை, நீர் ததும்பும் நீர் நிலைகள், குளிர்ந்த சீதோஷ்ண நிலை, பறவைகள், நுண்ணுயிரிகளுக்கு ஆதாரம் என, உலக உயிர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளவை, மரங்கள். மரங்களை அழித்ததால், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல பிரச்னைகளை இன்று சந்தித்து வருகிறோம்.

இதற்கு தீர்வாக, மரங்களை வளர்க்கும் "வேள்வி'யாக, ஆக., 23ல் "வனத்துக்குள் திருப்பூர்- 2015' திட்டம் துவங்கப்பட்டது. இதுவரை, 1.30 லட்சம் மரக்கன்றுகள் நடப் பட்டுள்ளன. இதற்கு, "வெற்றி' அமைப்புடன், "தினமலர்' நாளிதழ் இணைந்து, பசுமை எழுச்சியை உருவாக்கி, மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தை, மக்கள் மனதில் விதைத்தது.

திட்டம் துவங்கியது முதல், சேவை அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், பசுமை ஆர்வலர்கள், போலீசார், அறநிலையத்துறையினர், மாணவ, மாணவியர் என, பலதரப்பட்டவர்களும், இத்திட்டத்தில் ஆர்வமாய் இணைந்ததால், இலக்கை தாண்டி, மரக்கன்று நடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், இத்திட்டம் தூண்டுகோலாக மாறி, பசுமை உணர்வை வளர்த்துள்ளது. வழக்கமான மரக்கன்று நடும் நிகழ்வாக இல்லாமல், இத்திட்டத்தில்,நடப்பட்ட மரக்கன்றுகளை, இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணி ற்கொள்ளப்படுகிறது."மரங்களை வளர்த்தால், சொர்க்கத்தில் இடமுண்டு' என, விருட்ஷ சாஸ்திரம் கூறுகிறது. ஒரு மரம் வளர்ப்பது, 10 குழந்தைகளை வளர்ப்பதற்கு சமம். வாழும் தலைமுறைக்கும், வளரும் தலைமுறைக்கும் தூய காற்று, இதமான வெப்ப நிலை, மழைப்பொழிவு என, அற்புதமான சூழலை உருவாக்க மரங்கள் துணை நிற்கும்.

இன்று நிறைவு விழா
உன்னதமான இத்திட்டத்தின் நிறைவு விழா, திருப்பூர் வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் இன்று, காலை, 9:00 மணிக்கு துவங்கி, மதியம், 1:00 வரை விழா நடைபெறும். பகல், 11:00 வரை நடக்கும் முதல் அமர்வில், நிலங்களை மரங்களால் நிரப்பிய பசுமை குடும்பங்கள் கவுரவிக்கப்படுகின்றனர். "தினமலர்' நாளிதழ் துணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தென்மண்டல சி.பி. சி.ஐ.டி., - எஸ்.பி., அமித்குமார் சிங், கோவை "சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பகல், 11:00 முதல், 1:00 வரை நடக்கும் இரண்டாவது அமர்வில், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற டிராக்டர் வழங்கியதுடன், பராமரிப்பு செலவை ஏற்றுள்ள தொழில் நிறுவன உரிமையாளர்கள், கவுரவிக்கப்பட உள்ளனர். வெற்றி அமைப்பு தலைவர் சிவராம் வரவேற்கிறார். அமைச்சர் ஆனந்தன், கலெக்டர் கோவிந்தராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கந்தசாமி உள்ளிட்டோர், பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில், பெங்களூரு வாழும் கலை பயிற்சி அமைப்பு அறங்காவலர் அருண் மாதவனின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. முதல் அமர்வின்போது, தனியார் நிலங்களில் மரக்கன்று நடப்பட்ட நிகழ்வுகள், களப்பணிகள், பெரிய அளவிலான "எல்.இ.டி.,' திரையில் ஒளிபரப்பப்படும். நீர் விடும் பணியில் ஈடுபட்டுள்ள டிராக்டர்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி, "வெற்றி' அமைப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் முறை குறித்த செயல் விளக்கம் காண்பிக்கப்படும்.நடப்பட்ட மரக்கன்றுகள் குறித்த, நிலவியல் அளவீடு, மரக்கன்றுகளின் வகைகள், எண்ணிக்கை, முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய, "டிஜிட்டல்' பதிவு, அமைச்சரிடம் வழங்கப்படும். மரக்கன்றுகளை நட்டதோடு விட்டுவிடாமல், தொடர்ந்து பராமரித்து, இரண்டு ஆண்டுகள் வளர்த்து, நம் மாவட்டத்தை பசுமையாக்கும் உன்னதமான திட்டத்துக்கான, அற்புதமான இந்நிகழ்ச்சியில், அனைத்து தரப்பினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment