சென்னை : சென்னை குடிநீர் ஏரிகளுக்கு, நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால், அனைத்தும் அபாய கட்டத்தை எட்டியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் மூலம், சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு, 11 டி.எம்.சி., ஆகும். பருவமழையின் காரணமாக, நான்கு ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏரிகளின் நீர்மட்டம் 'கிடுகிடு'வென உயர்ந்தது. கடந்த மாதம், 17ம் தேதி முதல், ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றும் பணிகள் நடக்கின்றன. நேற்று காலை நிலவரப்படி, நான்கு ஏரிகளிலும் சேர்த்து, 9.27 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருந்தது. நான்கு ஏரிகளுக்கும் வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து இருந்தது. வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று காலை முதல், நான்கு ஏரிகளுக்கும் நீர்வரத்து, அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று மாலை நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு, 24 ஆயிரம் கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு, 20 ஆயிரம் கனஅடி, புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு தலா, 10 ஆயிரம் கனஅடிக்கு மேலும் நீர்வரத்து இருந்தது. மொத்தமாக நான்கு ஏரிகளுக்கும், 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து இருந்தது. நான்கு ஏரிகளின், மதகுகளை மீறி வெள்ளம் பாயும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து ஏரிகளும் அபாய கட்டத்தை எட்டியுள்ளன. இதனால், அவற்றில் இருந்து உபரி நீர் திறப்பை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் பொதுப்பணித்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, நான்கு ஏரிகளில் இருந்தும் வினாடிக்கு, 50 ஆயிரம் கனஅடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment